கலிக்கம்ப நாயனார்

தில்லைப்பதியின் மேல்பாலுள்ள திருப்பெண்ணாகடம் என்ற ஊரிலே வணிகர் குலத்திலே தோன்றியவர் கலிக்கம்பர். இவர் தூங்கானைமாடத் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனைப் பணிந்து சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் தொண்டினை ஆர்வமுடன் செய்து வந்தார். ஒரு நாள் தம் மனைவியார் நீர் வார்க்க அடியார் திருவடிகளை விளக்கி வரும் போது முன் தம் வீட்டில் பணி செய்தவர் பணியினை வெறுத்துச் சிவனடியாரான அவருடைய திருவடிகளையும் விளக்கப் புகுந்தார். அந்நிலையில் தண்ணீர் வார்த்து வரும் இவருடைய மனைவியார் “இவர் நம் வீட்டிற் பணி செய்த வேலையாள் போலும்” என் எண்ணி நீர் வார்க்கத் தாமதித்து நின்றார். அதனை உணர்ந்த கலிக்கம்பர் மனைவியார் கையிலுள்ள தண்ணீர்க் கரத்தை தாம் கைக்கொண்டு அவர் கையினை வாளால் தடிந்து தாமே அடியார் திருவடிகளை நீர்வார்த்து விளக்கி அடியார் அமுது செய்தற்கு வேண்டுவன எல்லாம் ஆர்வமுடன் செய்து அடியார்களைத் திருவமுது செய்வித்தார். அடியார் பத்தியின் மேலீ்ட்டால் இத்தகைய சிவனடித் தொண்டுகள் பல புரிந்து கலிக்கம்ப நாயனார் சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்