கலிய நாயனார்

நிலவுலகில் புகழினால் ஓங்கிய பெருமை உடையது தொண்டை நாடு ஆகும் அந்நாட்டில் தேர் உலவுதற்கு இடமாகிய நீண்ட வீதிகளை உடையது திருவொற்றியூர் என்னும் ஊர் ஆகும் திருப்பதிகங்கள் பாடும் மண்டபங்கள் பல உள்ளன மகளிர் ஆடுகின்ற அரங்குகளும் பல உள்ளன எண்ணெய் ஆட்டும் செக்கார் குலத்தில் கலியநாயனார் தோன்றினார் ஆவார் அக்குலம் விளக்கம் பெறத் தோன்றிய நாயனார் சைவத்தில் மேலோங்கி விளங்கினார் அளவற்ற செல்வத்திற்கு உரிமை உடையவராக இருந்தார் கலியநாயனார் ஆவார்

ஒற்றியூர்ப் படம்பக்க நாதர் திருக்கோயிலில் இரவும் பகலும் திருவிளக்கிடும் பணிபுரிந்தார் எண்ணில்லாத திருவிளக்கிடும் அத்தொண்டரின் செயலை உலகறியச் செய்ய இறைவன் எண்ணினார் அவருடைய பெருஞ்செல்வம் அழிந்தது இருப்பினும் தாம் செய்யும் தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்தார் பிறரிடம் எண்ணெய் வாங்கி விற்றுக் கொடுத்து அவர்கள் தரும் கூலி கொண்டு விளக்கெரித்தார் கலியநாயனார் ஆவார்.

பின்னாளில் எண்ணெய் விற்றுத்தரக் கொடுப்போர் இலர். ஆகவே செக்காடும் இடத்தில் சென்று செக்காட்டிப் பணி செய்தார் தொழில் செய்வோர் பலர் உளராகவே தொழில் செய்ய வழியின்றிப் போனார் தமது ஒப்பற்ற வீட்டினை விற்று விளக்கெரித்தார் கலியநாயனார் பின்னர் தமது மனைவியாரை விற்க முயன்றார் வாங்குவோர் இன்மையின் வருந்தித் திருக்கோயிலை அடைந்தார் கலியநாயனார்

விளக்கேற்றும் நேரம் வரவே இப்பணி நின்றுவிடுமானால் நான் மாண்டு விடுவதே நலம் என நினைத்தார். விளக்குகளுக்கெல்லாம் திரியிட்டுப் பரப்பி வைத்து எண்ணெய்க்குப் பதிலாகத் தமது குருதியை நிறைக்க எண்ணிக் கழுத்தை அரிந்தார். இறைவன் பெருகும் கருணையுடன் தோன்றிக் கைகளைப் பிடித்துக் காட்சி கொடுத்தார் திருவருள் பெற்றார் கலியநாயனார் ஆவார்

திருச்சிற்றம்பலம்