அருமறைகளை நன்கு உணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல்புரிந்தருளம் கூத்தப்பெருமானுக்கு அகம்படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திருவாரூர்ப் பெருமான் நம்பியாரூரராகிய சுந்தரர் திருத்தொண்டாத் தொகை பாடுதற்கு அடியெடுத்துக் கொடுத்தருளும் போது தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என இத்திருக்கூட்டத்தாரையே முதற்கண் குறிப்பிட்டு அருளிய திறத்தால் இவர்களது பெருமை நன்கு புலனாகும். மூவாயிரவராகிய இவர்கள் நீற்றினால் நிறைந்த கோலத்தினர். இறைவன்பால் பெருகிய அன்பினர். நான்மறையோதி முக்தீ வேள்வி இயற்றிப் பொன்னம்பல நாதனை நாளும் வழிபடுவதனையே தம் செல்வமெனக் கொண்டவர்கள்.