சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


சுவாமிபெயர் – தடுத்தாட்கொண்டவீசுவரர் தேவியார் – வேற்கண்மங்கையம்மை.


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.


பண் – இந்தளம்
001

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.01

002

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.02

003 மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.03

004 முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.04

005 பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்
ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.05

006

தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.06

007

ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.07

008

ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.08

009

மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.  7.1.09

010

காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.  7.1.10

திருச்சிற்றம்பலம்