சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.042 திருவெஞ்சமாக்கூடல்


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – விகிர்தேசுவரர், தேவியார் – விகிர்தேசுவரி


பண் – கொல்லிக்கௌவாணம்

425
எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு மிலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.1

426
குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும் மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.2

427
வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார் வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங் குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.3

428
பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய் படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணா ரகிலுந் நலசா மரையும் அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப மடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.4

429
துளைவெண் குழையுஞ் சுருள்வெண்டோடுந் தூங்குங்காதிற் றுளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய் கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய் பிறவாதவனே பெறுதற் கரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.5

430
தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய் சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய்
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார் புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார்
முழவா ரொலிபா டலோடா டலறா முதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.6

431
கடமா களியா னையுரித் தவனே கரிகாடிடமா அனல்வீசி நின்று
நடமா டவல்லாய் நரையே றுகந்தாய் நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண் பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.7

432
காடும் மலையுந் நாடு மிடறிக் கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப் பணைத்தோளியர் பாடலோ டாடலறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.8

433
கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.9

434
வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார் வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதி யேயென்று தான்விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன் வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத் திருப்பது திண்ணமன்றே. 7.42.10

திருச்சிற்றம்பலம்