சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.091 திருவொற்றியூர்


திருச்சிற்றம்பலம்


பண் – குறிஞ்சி

923
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே. 7.91.1

924
பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே. 7.91.2

925
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே. 7.91.3

926
என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
புன்னை மலரும் புறவிற் றிகழுந்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே. 7.91.4

927
பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே. 7.91.5

928
படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடையார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே. 7.91.6

929
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே. 7.91.7

930
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே. 7.91.8

931
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே. 7.91.9

932
ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே. 7.91.10

திருச்சிற்றம்பலம்