சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.009 திருஅரிசிற்கரைப்புத்தூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – படிக்காசுவைத்தவீசுவரர்,தேவியார் – அழகம்மை


பண் – இந்தளம்

083
மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர்
எரித்தீர் வருமுப் புரங்கள்
சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர்
சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்
கலவம் மயிற்பீலியுங் காரகிலும்
அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.1

084
அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத்
தீரழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்
பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை
வாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி
லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 7.9.2

085
தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்
சந்திரன் சவிதாவிய மானனானீர்
சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்
தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்
முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்
முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி
அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.3

086
கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம்
வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில்
உமக்கார் எதிரெம் பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக்
காமனை வேவக் கடைக்கண்ணினாற்
பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. 7.9.4

087
வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்
வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே
உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்
இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.5

088
அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி
சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி
மேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு
மென்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி
லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 7.9.6

089
பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப்
பகலோன்முத லாப்பல தேவரையுந்
தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை
என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி
விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி
அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.7

090
பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்
குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
பெருங்கா டரங்காகநின் றாடலென்னே
கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங்
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. 7.9.8

091
மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்
புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள் அரவோ டென்பணி கலனா
முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.9

092
கடிக்கும் அரவால் மலையால் அமரர்
கடலைக் கடையவெழு காளகூடம்
ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை
உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்
இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி
இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை
அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.10

093
காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை
யோடகி லுந்திட் டிருகரையும்
போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழ
காலுரைப் பார்களுங் கேட்பவருஞ்
சீரூர் தருதேவர் கணங்க ளொடும்
இணங்கிச் சிவலோகம தெய்துவரே. 7.9.11

திருச்சிற்றம்பலம்