சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.013 திருத்துறையூர்


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – துறையூரப்பர், தேவியார் – பூங்கோதையம்மை


பண் – தக்கராகம்

123
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்
கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.1

124
மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.2

125
கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.3

126
அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.4

127
பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.5

128
மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.6

129
மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.7

130
கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.8

131
விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர்
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.9

132
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்
பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த்
தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.10

133
செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன்
கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற்
பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே. 7.13.11

திருச்சிற்றம்பலம்