சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.037 திருவாரூர்


திருச்சிற்றம்பலம்


372
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. 7.37.1

373
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே. 7.37.2

374
சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்கு
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. 7.37.3

375
சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்கு
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே. 7.37.4

376
இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே. 7.37.5

377
வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்
அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக்
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. 7.37.6

378
தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப்
பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன்
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே. 7.37.7

379
சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள்
அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப்
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்
உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே. 7.37.8

380
குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்
றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப்
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே. 7.37.9

381
கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. 7.37.10

382
நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே. 7.37.11

திருச்சிற்றம்பலம்