சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.045 திருஆமாத்தூர்


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அழகியநாதர், தேவியார் – அழகியநாயகியம்மை


பண் – கொல்லிக்கௌவாணம்

456
காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே. 7.45.1

457
பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே. 7.45.2

458
காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே. 7.45.3

459
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே. 7.45.4

460
வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே. 7.45.5

461
காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே. 7.45.6

462
எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே. 7.45.7

463
பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே. 7.45.8

464
தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே. 7.45.9

465
உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே. 7.45.10

466
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை
மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல்
பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே. 7.45.11

திருச்சிற்றம்பலம்