சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.047 ஊர்த்தொகை


திருச்சிற்றம்பலம்


பண் – பழம்பஞ்சுரம்

478
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. 7.47.1

479
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே. 7.47.2

480
நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே. 7.47.3

481
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே. 7.47.4

482
மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே
அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே. 7.47.5

483
தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே. 7.47.6

484
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே
ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே. 7.47.7

485
துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைக ளகல அருளாயே. 7.47.8

486
புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா
பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ
கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே. 7.47.9

487
கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே. 7.47.10

திருச்சிற்றம்பலம்