சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.058 திருக்கழுமலம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரியீசுவரர்
தேவியார் – திருநிலைநாயகியம்மை


பண் – தக்கேசி

593
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.1

594
மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.2

595
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.3

596
மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.4

597
குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.5

598
வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.6

599
அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
மின்னின துருவை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.7

600
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மலைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.8

601
மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. 7.58.9

602
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே. 7.58.10

திருச்சிற்றம்பலம்