சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.061 திருவேகம்பம்


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஏகாம்பரநாதர்,
தேவியார் – காமாட்சியம்மை.


பண் – தக்கேசி

624
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.1

625
உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.2

626
திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி யேத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.3

627
குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் புமலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வறே. 7.61.4

628
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யிற்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானை காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.5

629
திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்
சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.6

630
விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.7

631
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.8

632
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.9

633
எள்க லின்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7.61.10

634
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மானென்றெப் போதுங்
கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக் குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே. 7.61.11

திருச்சிற்றம்பலம்