சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.079 திருப்பருப்பதம்


இத்தலம் வடநாட்டிலுள்ளது. இது ஸ்ரீசைலம் என்றும்
மல்லிகார்ச்சுனம் என்றும் பெயர்பெறும்.
சுவாமிபெயர் – பருவதநாதர், தேவியார் – பருவதநாயகியம்மை


பண் – நட்டபாடை

802
மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந்
தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே. 7.79.1

803
மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட மலங்கித்தன களிற்றை
அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவந் தெய்த்துத்
திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலையே. 7.79.2

804
மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே. 7.79.3

805
மையார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்கச்
செவ்வேதிரிந் தாயோவெனப் போகாவிட விளிந்து
கைபாவிய கவணால்மணி எறியஇரிந் தோடிச்
செவ்வாயன கிளிபாடிடுஞ் சீபர்ப்பத மலையே. 7.79.4

806
ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத்
தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலித்
தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ் சீபர்ப்பத மலையே. 7.79.5

807
மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழங்கை யெடுத்தும்
ஊற்றித்தழல் உமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழியத்
தூற்றத்தரிக் கில்லேனென்று சொல்லிஅயல் அறியத்
தேற்றிச்சென்று பிடிசூழறுஞ் சீபர்ப்பத மலையே. 7.79.6

808
அப்போதுவந் துண்டீர்களுக் கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டாலெமை எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில் என்றோடியக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி சீபர்ப்பத மலையே. 7.79.7

809
திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை
அரியதிரு மாலோடயன் றானும்மவர் அறியார்
கரியின்னினம் ஓடும்பிடி தேனுண்டவை களித்துத்
திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே. 7.79.8

810
ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதறத்
தீயென்றவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும்
மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லாந்
தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே. 7.79.9

811
நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன்
செல்லல்லுற அரியசிவன் சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே. 7.79.10

திருச்சிற்றம்பலம்