சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.87 திருப்பனையூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சவுந்தரேசர், தேவியார் – பெரியநாயகியம்மை


பண் – சீகாமரம்

882
மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
றாடு மாறுவல்லார் அவரே அழகியரே. 7.87.1

883
நாறுசெங்கழு நீர்மலர் நல்லமல்லிகை சண்பகத்தொடு
சேறுசெய் கழனிப் பழனத் திருப்பனையூர்
நீறுபூசிநெய் யாடிதன்னை நினைப்பவர்தம் மனத்தனாகிநின்
றாறு சூடவல்லார் அவரே அழகியரே. 7.87.2

884
செங்கண்மேதிகள் சேடெறிந்து தடம்படிதலிற் சேலினத்தொடு
பைங்கண் வாளைகள் பாய்பழனத் திருப்பனையூர்த்
திங்கள்சூடிய செல்வனாரடி யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி
லங்கிருந் துறைவார் அவரே அழகியரே. 7.87.3

885
வாளைபாய மலங்கிளங்கயல் வரிவராலுக ளுங்கழனியுள்
பாளையொண் கமுகம் புடைசூழ் திருப்பனையூர்த்
தோளுமாகமுந் தோன்றநட்டமிட் டாடுவாரடித் தொண்டர்தங்களை
ஆளு மாறுவல்லார் அவரே அழகியரே. 7.87.4

886
கொங்கையார்பல ருங்குடைந் தாடநீர்க்குவ ளைமலர்தர
பங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர்
மங்கைபாகமும் மாலோர்பாகமுந் தாமுடையவர் மான்மழுவினோ
டங்கைத் தீயுகப்பார் அவரே அழகியரே. 7.87.5

887
காவிரிபுடை சூழ்சோணாட்டவர் தாம்பரவிய கருணையங்கடலப்
பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர்
மாவிரிமட நோக்கிஅஞ்ச மதகரியுரி போர்த்துகந்தவர்
ஆவில்ஐந் துகப்பார் அவரே அழகியரே. 7.87.6

888
மரங்கள்மேல்மயி லாலமண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல்
திரங்கல்வன் முகவன் புகப்பாய் திருப்பனையூர்த்
துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த் தோன்றலுமறி யாமற்றோன்றிநின்
றரங்கில் ஆடவல்லார் அவரே அழகியரே. 7.87.7

889
மண்ணெலாம்முழ வம்மதிர்தர மாடமாளிகை கோபுரத்தின்மேற்
பண்ணி யாழ்முரலும் பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடைமேவியவிண்ணவரொடு மண்ணவர்தொழ
அண்ணலாகி நின்றார் அவரே அழகியரே. 7.87.8

890
குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக் குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப்
பரக்குந் தண்கழனிப் பழனத் திருப்பனையூர்
இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை தோளிருபது தாள்நெரிதர
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே. 7.87.9

891
வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர் மாதவர்வள ரும்வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயிலுந் திருப்பனையூர்
வஞ்சியும்வளர் நாவலூரன் வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பார் அவரே அழகியரே. 7.87.10

திருச்சிற்றம்பலம்