சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.90 கோயில்


திருச்சிற்றம்பலம்


பண் – குறிஞ்சி

913
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.1

914
பேராது காமத்திற் சென்றார்போல் அன்றியே பிரியா துள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந் திருவி னாரை
ஓராது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.2

915
நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து நாளும் உள்கிப்
பிரியாத அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழுஞ் சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.3

916
கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட் டறுப்பிப் பானை
அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங் காவல் பூண்ட
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.4

917
கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோ ட உதைத்துகந் துலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.5

918
உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.6

919
முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கு மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக
விட்டானை மலையெடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.7

920
கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா கருத கிற்றார்க்
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே நம்மைநாளுஞ்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.8

921
நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே நம்மை நாளுந்
தாடுடைய தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. 7.90.9

922
பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே. 7.90.10

திருச்சிற்றம்பலம்