சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.049 சீகாழி


524
பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாடொறும்
கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்
பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே. 01
525
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 02
526
நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி
தோடு லாவிய காது ளாய்சுரி
சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே. 03
527
மையி னார்பொழில் சூழ நீழலில்
வாச மார்மது மல்க நாடொறுங்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித்
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே. 04
528
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே. 05
529
மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானைநி
னைந்தி ருந்திசை பாடுவார் வினை
செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே. 06
530
தான லம்புரை வேதி யரொடு
தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே. 07
531
மைத்த வண்டெழு சோலை யாலைகள்
சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே. 08
532
பரும ராமொடு தெங்கு பைங்கத
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி
திருவின் நாயக னாய மாலொடு
செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே. 09
533
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடுங் கூடிய
வேடனே சுட லைப்பொ டியணி
அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே. 10
534
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே. 11

திருச்சிற்றம்பலம்