சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.051 திருக்களர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – களர்முளையீசுவரர், தேவியார் -அழகேசுவரியம்மை.


பண் – சீகாமரம்
546
நீருளார் கயல் வாவி சூழ்பொழில்
நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும்
ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே. 01
547
தோளின் மேலொளி நீறு தாங்கிய
தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
வேளின் நேர்விச யற்க ருள்புரி
வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே. 02
548
பாட வல்லநல் மைந்த ரோடு
பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி
நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே. 03
549
அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்
ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை
வாஇ ணையடி போற்றி நின்றவர்க்
கன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே. 04
550
கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங்
கிண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண
வாளனே பிணை கொண்டொர் கைத்தலத்
தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே. 05
551
கோல மாமயில் ஆலக் கொண்டல்கள்
சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீல மேவிய கண்டனே நிமிர்
புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆலநீழ லுளாய் அடைந்தார்க் கருளாயே. 06
552
தம்ப லம்மறி யாதவர் மதில்
தாங்கு மால்வரை யால ழலெழத்
திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி
வானவர் தொழக் கூத்து கந்துபே
ரம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே. 07
553
குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி
மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்
சென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே. 08
554
பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு
வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே. 09
555
பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண்
தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே. 10
556
இந்து வந்தெழு மாட வீதியெ
ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை
அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே. 11

திருச்சிற்றம்பலம்