சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.059 சீகாழி


 

பண் – காந்தாரம்
633

நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.  01

634

ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.  02

635

வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்
கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.  03

636

மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்
பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.  04

637

பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.  05

638

மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.  06

639

புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.  07

640

அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்
பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.  08

641

மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே.  09

642

அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.  10

643

ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.  11

திருச்சிற்றம்பலம்