சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.33 திருநள்ளாறு – திருவிராகம்

பண்இந்தளம்

350

ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.-01

351

விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.-02

352

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.-03

353

கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.-04

354

நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.-05

355

பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.-06

356

நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.-07

357

கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.-08

358

உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.-09

359

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.-10

360

ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.-11

திருச்சிற்றம்பலம்