சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.30 திருப்புறம்பயம் – திருவிராகம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சாட்சிவரதநாதர், தேவியார் – கரும்பன்னசொல்லம்மை.

பண்இந்தளம்
317

மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்
கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய்.-01

318

விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந்
தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய்.-02

319

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய்.-03

320

வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய்.-04

321

பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே.-05

322

அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய்.-06

323

மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய்.-07

324

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய்.-08

325

வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக்
கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய்.-09

326

விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்
அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே.-10

327 கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந்
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார்
பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே.-11

திருச்சிற்றம்பலம்