சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.17 திருவேணுபுரம்

பண்இந்தளம்

176

நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.-01

177

அரவார் கரவன் அமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.-02

178

ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேகந் தவழும் வேணு புரமே.-03

179

காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுஇன் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே.-04

180

அரையார் கலைசேர் அனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே.-05

181

ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.-06

ப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.-07

182

ஏவும் படைவேந் தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே.-08

183

கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் இருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணிற் றிகழும் வேணு புரமே.-09

184

போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் மறியா அடியார் இறையூர்
மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் மறிவார் வேணு புரமே.-10

185

கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.-11

திருச்சிற்றம்பலம்