சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.111 திருவாய்மூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வாய்மூரீசுவரர், தேவியார் – பாலினுநன்மொழியம்மை.


பண் – நட்டராகம்

1201

தளிரிள வளரென உமைபாடத் தாள மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருள்நல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  01

1202

வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
வந்தனை பலசெய இவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  02

1203

பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ள முருகி லுடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர் சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  03

1204

எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல் எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம் பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  04

1205

அஞ்சன மணிவணம் எழில்நிறமா வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல் வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே
வஞ்சனை வடிவினோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  05

1206

அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  06

1207

கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  07

1208

கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்  பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  08

1209

ஏனம ருப்பினொ டெழிலாமை யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற கள்வர் கனவில் துயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித் திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  09

1210

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.  10

1211

திங்களோ டருவரைப் பொழிற்சோலைத் தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமோ டருமறை யொலிபாடல் அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.  11

திருச்சிற்றம்பலம்