சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.061 திருவெண்காடு


பண் – காந்தாரம்
655

உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே.  01

656

நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே.  02

657

தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே.  03

658

நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்
விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே.  04

659

பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே.  05

660

ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென்
றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட்
கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.  06

661

கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால்
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.  07

662

வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும்
இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.  08

663

கரியா னோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்
குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.  09

664

பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.  10

665

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே.  11

திருச்சிற்றம்பலம்