சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.101 திருவாரூர் – திருவிராகம்


பண் – நட்டராகம்
1092

பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.  01

1093

விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.  02

1094

கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்
மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே.  03

1095

அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.  04

1096

சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே.  05

1097

கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ
டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே.  06

1098

கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.  07

1099

வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே.  08

1100

இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே.  09

1101

பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.  10

1102

வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை
நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.  11

திருச்சிற்றம்பலம்