சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.105 திருக்கீழ்வேளூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அட்சயலிங்கநாதர், தேவியார் – வனமுலைநாயகியம்மை.


1136

மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறைஒலி நாவினர் கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.  01

1137

நீரு லாவிய சடையிடை யரவொடு மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய இறைவன துறைவிடம் எழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் பிணியொடு வினைபோமே.  02

1138  

வெண்ணி லாமிகு விரிசடை யரவொடுவெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்  பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே.  03

1139

சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளும் நாதனார் நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே.  04

1140  

துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன் மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் நிமலனை நினைவோடுஞ்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.  05

1141  

கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக் கோயில்மன்னும்
முத்து லாவிய வித்தினை யேத்துமின் முடுகிய இடர்போமே.  06

1142  

பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர் காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக் கோயில்மன்னும்
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினைபோமே.  07

1143  

மலைநி லாவிய மைந்தனம் மலையினை யெடுத்தலும் அரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர் காதல்செய் பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால் நினையவல் வினைபோமே.  08

1144  

மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவோடுஞ்
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே.  09

1145

சீறு லாவிய தலையினர் நிலையிலா அமணர்கள் சீவரத்தார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில் பெருந்திருக் கோயில்மன்னு
பேறு லாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே.  10

1146  

குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.  11

திருச்சிற்றம்பலம்