சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.110 திருமாந்துறை


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஐராவணேசுவரர், தேவியார் – அழகாயமர்ந்தநாயகியம்மை.


பண் – நட்டராகம்

1190

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ லேத்துதல் செய்வோமே.  01

1191

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானத்
துளவ மால்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.  02

1192

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை  மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது கெழுமுதல் அறியோமே.  03

1193

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது வணங்குதல் அறியோமே.  04

1194

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே.  05

1195

பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே.  06

1196

நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே.  07

1197

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே.  08

1198

நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.  09

1199

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே.  10

1200

வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.  11

திருச்சிற்றம்பலம்