சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.113 சீகாழி


பண் – செவ்வழி

1223

பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக்
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.  01

1224

மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.  02

1225

கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.  03

1226

குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.  04

1227

விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.  05

1228

தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.  06

1229

மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.  07

1230

முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன்
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.  08

1231

பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந்
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்
காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே.  09

1232

உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார்
முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர
கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே.  10

1233

கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.  11

திருச்சிற்றம்பலம்