சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.117 திரு இரும்பைமாகாளம்


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாகாளேசுவரர், தேவியார் – குயிலம்மை.


பண் – செவ்வழி

1267

மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.  01

1268

வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.  02

1269

வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.  03

1270

நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.  04

1271

பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி
ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.  05

1272

குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.  06

1273

பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.  07

1274

நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்
அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே
இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.  08

1275

அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே.  09

1276

அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.  10

1277

எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே.  11

திருச்சிற்றம்பலம்