சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.119 திருநாகேச்சரம்


பண் – செவ்வழி

1289

தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின்
பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்
தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே.  01

1290

பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய
வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார்
நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங்
கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே.  02

1291

குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.  03

1292

கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந்
தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.  04

1293

வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே.  05

1294

காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே.  06

1295

வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய்
பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.  07

1296

இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும்
மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.  08

1297

கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.  09

1298

தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்
மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.  10

1299

கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்
நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம்
பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்
எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.  11

திருச்சிற்றம்பலம்