சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.120 திருமூக்கீச்சரம்


பண் – செவ்வழி

1300

சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.  01

1301

வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக்
கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே.  02

1302

மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.  03

1303

அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந்
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே.  04

1304

விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.  05

1305

வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.  06

1306

அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்
உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்
அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.  07

1307

ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்
கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.  08

1308

நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.  09

1309

வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்
ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.  10

1310

மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.  11

திருச்சிற்றம்பலம்