சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.34 திருப்பழுவூர் – திருவிராகம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வடவனநாதர், தேவியார் – அருந்தவநாயகியம்மை.

பண்இந்தளம்

361

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.-01

362

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.-02

363

வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.-03

364

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே.-04

365

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே.-05

366

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.-06

367

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.-07

368

உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே.-08

369

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.-09

370

மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.-10

371

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11-

திருச்சிற்றம்பலம்