சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.73 திருப்பிரமபுரம் – திருச்சக்கரமாற்று


பண் – காந்தாரம்

787

விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலிவெங் குருமேற் சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச் சிரபுரம்வண் புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவ னூரே.  01

788

திருவளருங் கழுமலமே கொச்சைதே வேந்திரனூர் அயனூர் தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் காழிதகு சண்பை யொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் கண்டத்தோன் விரும்புமூரே.  02

789

வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில் காழியிறை கொச்சை யம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய மிக்கயனூர் அமரர் கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ தரன்நாளும் அமரு மூரே.  03

790

மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் புகலிதராய் தோணிபுரம் வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே கொச்சைதே வேந்திரனூர் சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் சிலம்பனூர் காழி சண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் பயன்நுகர்வோர் பரவு மூரே.  04

791

தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி வயங்கொச்சை தயங்கு பூமேல்

விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர் விண்ணவர்தங் கோனூர் வென்றித்

திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல் வம்பெருகு தோணிபுரஞ் சீர்

உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம் உலகத்தில் உயர்ந்த வூரே.  05

792

புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு சிரபுரம்பூங் காழி சண்பை
எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி பூந்தராய் தோணிபுரஞ் சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற் கொச்சைவா னவர்தங் கோனூர்
அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை யுதைத்துகந்த அப்ப னூரே.  06

793

வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் கோனூர்வண் புகலி யிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு சண்பைவியன் காழி கொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் பால்வண்ணன் பயிலு மூரே.  07

794

மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் காழி மூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை வேணுபுரங் கமல நீடு
கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி தராய்தோணி புரங்கூ டப்போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள் செற்றமலைச் சிலைய னூரே.  08

795

இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத் தயனூர்சீர்த் தேவர் கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி லாச்சண்பை காழி கொச்சை
அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந் தணர்வேத மறாத வூரே.  09

796

மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் கொச்சையிந் திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார் குருப்புகலி தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் சிலம்பனூர் செருச்செய் தன்று
மாலோடும் அயனறியான் வண்காழி சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே.  10

797

ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் கொச்சைகழு மலமன் பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமொண் புறவ நண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் புகலிவெங் குருவு மென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா வகைநின்றான் தங்கு மூரே.  11

798

அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப்
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுரம் அயனூர் மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே.  12

திருச்சிற்றம்பலம்