சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.76 திருஅகத்தியான்பள்ளி


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அகத்தீசுவரர், தேவியார் – மங்கைநாயகியம்மை.


பண் – காந்தாரம்

822

வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே.  01

823

துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான்
மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்
அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை
உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே.  02

824

உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே.  03

825

காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.  04

826

போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே.  05

827

தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே.  06

828

ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.  07

829

செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம்
ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.  08

830

சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.  09

831

செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.  10

832

ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய
மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே.  11

திருச்சிற்றம்பலம்