சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.118 திருப்பருப்பதம்

இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்
மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
சுவாமிபெயர் – பருப்பதேசுவரர், தேவியார் – பருப்பதமங்கையம்மை.

பண் – வியாழக்குறிஞ்சி

1271

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.-1.118.1

1272

நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.-1.118.2

1273

துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.-1.118.3

1274

கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.-1.118.4

1275

துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.-1.118.5

1276

சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.-1.118.6

1277

புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.-1.118.7

1278

நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.-1.118.8

1279

மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல்
திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.-1.118.10

1279

சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.-1.118.11

1280

வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல
ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.-1.118.12

திருச்சிற்றம்பலம்