சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.80 கோயில்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் – சிவகாமியம்மை.

பண் – குறிஞ்சி

864

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.-1.80.1

865

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.-1.80.2

866

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.-1.80.3

867

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.-1.80.4

868

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.-1.80.5

869

வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.-1.80.6

870

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.-1.80.7

871

கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.-1.80.8

872

கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.-1.80.9

873

பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.-1.80.10

874

ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.-1.80.11

திருச்சிற்றம்பலம்