சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.52 திருநெடுங்களம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நித்தியசுந்தரர், தேவியார் – ஒப்பிலாநாயகியம்மை.

பண் – பழந்தக்கராகம்

559

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.          1.52.1

560

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.          1.52.2

561

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.                                        1.52.3

562

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.          1.52.4

563

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.                                        1.52.5

564

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.          1.52.6

565

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.                                        1.52.7

566

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.                                        1.52.8

567

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.                                        1.52.9

568

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.          1.52.10

569

நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.          1.52.11

திருச்சிற்றம்பலம்