சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.69 திரு அண்ணாமலை

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அருணாசலேசுவரர்,  தேவியார் – உண்ணாமுலையம்மை

பண் – தக்கேசி

743  

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.                                              1.69.1

744  

மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.                                              1.69.2

745  

ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.                                              1.69.3

746  

இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.                                              1.69.4

747  

உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.                                              1.69.5

748

எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.                                              1.69.6

749  

வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.                                              1.69.7

750  

மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.                                              1.69.8

751  

தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.                                              1.69.9

752  

தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.                                             1.69.10

753  

அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.                                                1.69.11

திருச்சிற்றம்பலம்