சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.120 திருவையாறு – திருவிராகம்

பண் – வியாழக்குறிஞ்சி

1293

பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.1

1294

கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.2

1295

வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.3

1296

வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.4

1297

வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.5

1298

முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.6

1299

வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.7

1300

விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.8

1301

விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.9

1302

மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.-1.120.10

1303

நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.-1.120.11

திருச்சிற்றம்பலம்