சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.122 திருவிடைமருதூர் – திருவிராகம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை.

பண் – வியாழக்குறிஞ்சி

1315

விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.-1.122.1

1316

மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.-1.122.2

1317

சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே.-1.122.3

1318

விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே.-1.122.4

1319

உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.-1.122.5

1320

ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை அடிகள தறைகழல்
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.-1.122.6

1321

கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடமிடை மருதே.-1.122.7

1322

செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.-1.122.8

1323

அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.-1.122.9

1324

குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.-1.122.10

1325

பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே.-1.122.11

திருச்சிற்றம்பலம்