சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.38 திருமயிலாடுதுறை

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாயூரநாதர், தேவியார் – அஞ்சநாயகியம்மை.

பண் – தக்கராகம்

404

கரவின் றிநன்மா மலர்கொண்டே
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.          1.38.1

405

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.          1.38.2

406

ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே.          1.38.3

407

அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
துஞ்சும் பிணியா யினதானே.          1.38.4

408

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே                                        1.38.5

409

தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே.          1.38.6

410

அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே.                                        1.38.7

411

சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலா டுதுறையே.                                        1.38.8

412

ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே.          1.38.9

413

நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே.          1.38.10

414 நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.     1.38.11

திருச்சிற்றம்பலம்