சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.125 திருச்சிவபுரம் – திருவிராகம்

பண் – வியாழக்குறிஞ்சி

1348

கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.-1.125.1

1349

படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.-1.125.2

1350

வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.-1.125.3

1351

துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
மணிமிட றனதடி இணைதொழு மவரே.-1.125.4

1352

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமையுடை யவனே.-1.125.5

1353

முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.-1.125.6

1354

வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை யிலரே.-1.125.7

1355

கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.-1.125.8

1356

அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே.-1.125.9

1357

புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.-1.125.10

1358

புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.-1.125.11

திருச்சிற்றம்பலம்