சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.129 திருக்கழுமலம்

பண் – மேகராகக்குறிஞ்சி

1383

சேவுயருந் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயிற்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே.-1.129.1

1384

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான் அமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும் இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே.-1.129.2

1385

அலங்கல்மலி வானவருந் தானவரும் அலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர்வாழ் கழுமலமே.-1.129.3

1386

பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு மகிழ்வெய்துங் கழுமலமே.-1.129.4

1387

ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர் செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு சுதைமாடக் கழுமலமே.-1.129.5

1388

தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய அகம்பாயுங் கழுமலமே.-1.129.6

1389

புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப் புள்ளிரியுங் கழுமலமே.-1.129.7

1390

அடல்வந்த வானவரை யழித்துலகு தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல் பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
நடவந்த உழவரிது நடவொணா வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற் கரைகுவிக்குங் கழுமலமே.-1.129.8

1391

பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்துங் கழுமலமே.-1.129.9

1392

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க மேல்படுக்குங் கழுமலமே.-1.129.10

1393

கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார் தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான் அடிசேர முயல்கின்றாரே.-1.129.11

திருச்சிற்றம்பலம்