திருச்சிற்றம்பலம்

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.

பண் – நட்டபாடை

195

பிறையணி படர்சடை முடியிடைப் பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு நலம்மலி கழல்தொழன் மருவுமே. 1.19.1

196

பிணிபடு கடல்பிற விகளற லெளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதம ரனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை உமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநல மலிகழ லிணைதொழன் மருவுமே.    1.19.2

197

வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புழைபொழில் விழவொலி மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி இரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை இருள்கெட நனிநினை வெய்துமதே.     1.19.3

198

வினைகெட மனநினை வதுமுடி கெனின்நனி தொழுதெழு குலமதி
புனைகொடி யிடைபொருள் தருபடு களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலமமர் கதிர்மதி யினனதிர் கழல்களே.   1.19.4

199

தலைமதி புனல்விட அரவிவை தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளினன் நிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி லெரியுண மனமரு வினன்நல
கலைமரு வியபுற வணிதரு கழுமலம் இனிதமர் தலைவனே. 1.19.5

200

வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய கழுமலம் அமர்கன லுருவினன்
அரைபொரு புலியதள் உடையினன் அடியிணை தொழவரு வினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட வுயருல கெய்தலொரு தலைமையே. 1.19.6

201

முதிருறு கதிர்வளர் இளமதி சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை யுடைபுலி அதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி தொழுமறி வலதறி வறியமே.   1.19.7

202

கடலென நிறநெடு முடியவ னடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படையரு ளியபுக ழரவரை யினன்அணி கிளர்பிறை
விடம்நிறை மிடறுடை யவன்விரி சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகடல் மறுகுடை யுயர்கழு மலவியன் நகரதே.   1.19.8

203

கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர்கன லுருவினன் அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையு மிலநில வகைதனி லெளிதிமை யவர்விய னுலகமே.     1.19.9

204

அமைவன துவரிழு கியதுகி லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம ரிறைவன தடிபர வுவர்தமை
நமையல வினைநல னடைதலி லுயர்நெறி நனிநணு குவர்களே.     1.19.10

205

பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே.     1.19.11

திருச்சிற்றம்பலம்