சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.93 திருமுதுகுன்றம் – திருவிருக்குக்குறள்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது – இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் – பழமலைநாதர்; தேவியார் – பெரியநாயகியம்மை.

பண் – குறிஞ்சி

1003

நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.-1.93.1

1004

அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.-1.93.2

1005

ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வைய முமதாமே.-1.93.3

1006

ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே.-1.93.4

1007

மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.-1.93.5

1008

மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.-1.93.6

1009

விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
படையா யினசூழ, உடையா ருலகமே.-1.93.7

1010

பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.-1.93.8

1011

இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.-1.93.9

1012

தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.-1.93.10

1013

நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.-1.93.11

திருச்சிற்றம்பலம்